கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சம்பள உயர்வு, 8 மணி நேர வேலை , சட்ட விரோதமான ஒப்பந்தம் கூடாது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல போராட்டங்கள் வெற்றியும் பெற்றன. தற்போது வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையை சேர்ந்த 400 க்கு மேற்பட்ட செவிலியர்கள் முறைப்படி ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தும் அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப் படாததால் மே 28 , 2012 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
Thursday, 7 June 2012
Sunday, 3 June 2012
நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டும்
மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC ) பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஏப்ரல் 21 ,2012 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல சுற்று பேச்சு வார்த்தைகள் நிர்வாகத்திற்கும் , தொழிலாளர்களுக்கும் இடையே நிகழ்ந்தபோதும் தொழிலாளர்களின் நியாயமான எந்தக் கோரிக்கைகளையும் ஏற்க என்.எல்.சி நிர்வாகம் முன்வரவில்லை.
Saturday, 2 June 2012
மதுரையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜி.வி.கே வின் அடக்குமுறைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
108 ஆம்புலன்ஸ் திட்டம் முழுக்க முழுக்க அரசின் நிதியுதவியுடன் நடைபெறுகிறது, ஆம்புலன்ஸ் வாங்குவது, ஊழியர்களின் சம்பளம், வண்டிக்கு ஆகும் பிற செலவுகள் அனைத்துமே அரசே வழங்குகிறது. ஜி.வி.கே. நிறுவனம் வெறுமனமே அரசின் பணத்தை பெற்று அதை நிர்வாகம் செய்யும் பணியை மட்டும் செய்கிறது. இவ்வாறு செயல்படும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அரசு தரும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே ஊழியர்களுக்கு வழங்கிவருகிறது ஜி.வி.கே.நிர்வாகம் . பணி மூப்பின் அடிப்படையில் சம்பள உயர்வை வழங்காமல் அப்ரைசல் என்ற பெயரில் நிர்வாகத்திற்கு சாதகமாக நடந்து கொள்பவர்களுக்கு சற்று கூடுதலாகவும் ( அதுவும் அதிகம் இல்லை ) , மற்றவர்களுக்கு மிக குறைந்த ஊதிய உயர்வையும் வழங்கி வருகிறது.
Tuesday, 1 May 2012
மே 1 : தொழிலாளர் தினத்தில் வர்க்க விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்போம்
சிகாகோ தொழிலாளர்களின் போராட்ட உரிமை குரலை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது முதலாளித்துவம். ஆனாலும் உலகம் முழுவதுமான தொழிலாளர்களின் எழுச்சிக்கு அந்த போராட்டமே வித்திட்டது. 8 மணி நேரம் வேலை, 8 மணிநேர ஓய்வு , 8 மணி நேரம் சமுதாயப்பணி ஆகிய முழக்கங்கள் உலகம் முழுவதும் தொழிலாளர்களால் முழக்கங்கப்பட்டது. இன்று தொழிலாளி வர்க்கம் பெற்றுள்ள பல உரிமைகள் பல்வேறு தொழிலாளர் இயக்கங்களால் ரத்தம் சிந்தி பெறப்பட்டவையே. அப்படி பெறப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றாக தொழிலாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்று உழைக்கும் மக்களை விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றின் கொடுமையை முன்பை விட அதிகமாக அனுபவிக்கும் நிலைமைக்கு முதலாளித்துவம் தள்ளியுள்ளது.
Monday, 30 April 2012
நம்பிக்கை ஒளியை ஏற்றியது: மதுரையில் நடைபெற்ற அச்சகத் தொழிலாளர் கருத்தரங்கம்
மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்
கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம் மதுரை ,செல்லூர், 50 அடி
ரோடு, தியாகி பாலு 2-வது தெருவில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில்
மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக 19.04.2012 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அச்சகத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த
தோழர்.கதிரவன் தலைமை தாங்கினார்.
Friday, 13 April 2012
மையில நனச்சு பேப்பரில் அடிச்சால் மறுத்துப் பேச ஆளில்லை
மையில நனச்சு பேப்பரில் அடிச்சால்
மறுத்துப் பேச ஆளில்லை; அதனைச் செய்யும்
அச்சகத் தொழிலாளரின் பிரச்னைகளை
நினைத்துப் பார்க்க அமைப்பில்லை
என்ற நிலையை மாற்ற அணிதிரள்வோம்
வாழ்க்கைச் செலவினங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தாலும் சம்பளம் மட்டும் சிறிதளவு கூட உயராத பல தொழில்கள் நமது நாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று அச்சுத் தொழிலாகும். “உலகம் இதுலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது, கலகம் வருது; தீருது; அச்சுக் கலையால் உலகம் மாறுது” என்று பாடினார் கவிஞர் மருதகாசி. அவ்வாறு உலகையே மாற்றிய அச்சுக் கலைத்துறையில் பணிபுரிவோரின் ஊதியங்கள் சராசரியாக மாதம் ரூபாய் 5000/ என்னும் அளவிற்கே உள்ளன.
Tuesday, 13 March 2012
இருபது வருடங்களாக தொழிலாளர்களை பாடாய் படுத்தி வரும் புகலூர் பாரிஸ் சுகர் பேக்டரி நிர்வாகம்
நமக்கு இனிப்பு சுவை தரும் பண்டங்களை சாப்பிடும் பொது சந்தோசம் பிறக்கும் , ஆனால் அந்த இனிப்பு சுவைக்கு காரணமான சர்க்கரையை விளைவிக்கும் விவசாயிகளும் , சர்க்கரை ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் அது போன்ற சந்தோசத்தை அனுபவித்த தருணங்கள் மிக குறைவே ஆகும். மிகப்பிரமாண்டமான ஆலையில் ராட்சத அரவை இயந்திரங்களில் அறைபடுவது கரும்பு மட்டுமல்ல ஏழை தொழிலாளர்களும் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். தொழிலாளி அவன் விளைவிக்கும் பொருள்களில் இருந்தே அன்னியமாக்கபடும் தனிச் சொத்துடமை ஒழியும் வரை இந்த கொடுமைகள் தொடரவே செய்யும் .
Sunday, 11 March 2012
தொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்
பூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்த தொழிலாளர்களான இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மிகவும் குறைவாகும். முதலில் ட்ரெயினியாக வேலைக்கு சேரும் இவர்களுக்கு ரூ.3000௦௦ ற்கும் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. பிறகு என்ன தான் குட்டி கரணம் அடித்து வேலை செய்தாலும் இவர்களின் மாத சம்பளம் ரூ.6000 த்தை தாண்டுவதில்லை. வேலை நிரந்தரமாக்கப்படுவது என்பது அறவே ஒழிக்கப்பட்டு விட்டது.
Thursday, 8 March 2012
அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் , பேரணி
மும்பை , கொல்கத்தா , கேரளாவில் தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் கோரி தொடர்ந்து வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அந்த போராட்ட தீ சென்னையில் தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர்களையும் பற்றிக் கொண்டது. மெட்ராஸ் மெடிகல் மிசன் , மலர், அப்பல்லோ ஆகிய மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். மெட்ராஸ் மெடிகல் மிசன் , மலர் மருத்துவ மனைகளில் நிர்வாகத்திற்கும் ,தொழிலாளர்களுக்கும் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து செவிலியர்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர்.(நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் பாதிக்கும் மேல் ஏற்றுக்கொண்டது )
Wednesday, 7 March 2012
சென்னை நகர செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரள்வோம்
கல்வியும் மருத்துவமும் தொழில்களாக கருதப்படுவதில்லை. அவை சேவையாக கருதப்படுகின்றன. சேவை என்பதன் பொருள் ஆதாயம் கருதமால் மனித குலத்திற்கு ஆற்றும் பணியாகும். ஆனால் இவ்விரு துறைகளும் சேவையாக இல்லாமல் லாபம் ஈட்டுவதையே முதல் மற்றும் முழு நோக்கமாகக் கொண்டு செயல்படுபவையாக இன்று ஆகி விட்டன. அதற்கான காரணம் அரசு இவ்விரு துறைகளையும் கைவிட்டுருப்பதாகும். அரசு மருத்துவ மனைகளை மட்டுமே பல காலம் நம்பியிருந்த சாதாரண மக்கள் கூட இன்று தனியார் மருத்துமனைகள் பக்கம் தள்ளப்படுகின்றனர். அம்மருத்துவமனைகள் அப்பட்டமான வணிக வளாகங்கள் போல் ஆகிவிட்டன. அறை வாடகையிலிருந்து மருத்துவர் கட்டணம் வரை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவை கட்டணங்களை வசூலித்து குவிக்கின்றன.
Sunday, 4 March 2012
தனியார் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்தம் வெல்லட்டும்
சென்னையில் உள்ள மிகப்பெரிய கார்பரேட் மருத்துவமனைகளான அப்பல்லோ,போர்ட்டிஸ் மலர், மியாட் , மெட்ராஸ் மெடிகல் மிசன் , குளோபல், பில்ராத் போன்ற மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் ஊதிய உயர்வு, ஓவர் டைம்மிற்கு இரண்டு மடங்கு ஊதியம் , கொத்தடிமைகளாக ஆக்கி வைத்துள்ள சட்டவிரோத ஒப்பந்த முறையை ஒழிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள் , வேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே முறைபடி ஸ்ட்ரைக் நோட்டீஸ் நிர்வாகத்திற்கு அளித்துள்ளனர்.
Wednesday, 29 February 2012
28 .02 .2012 பொது வேலை நிறுத்தம்
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு பல்வேறு தொழிலாளர் விரோத போக்குகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. பல்வேறு போராட்டங்களின் மூலம் ரத்தம் சிந்தி வாங்கிய தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் விதத்தில் ஒவ்வொரு சட்டங்களாக கொண்டு வருகிறது. அதை தட்டி கேட்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளோ உலகமயத்தின் அப்பாவி பலிகிடாக்கள் இந்திய முதலாளிகள் என்று கூறிக்கொண்டு இந்திய முதலாளிகளின் சுரண்டலை அம்பலப்படுத்துவதில்லை. ஆனாலும் அடிமட்டத்தில் இருக்கும் தொழிலாளிகள் இதை நன்றாக உணர்ந்துள்ளார்கள்.
தியாகி பகத்சிங் சிலை மதுரையில் அமைக்க வேண்டும்: மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை
சமூக வளர்ச்சியின் படிக்கட்டுகளில் அச்சுத்தொழிலுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. இந்த சமூக வளர்ச்சிக்கு பாடுபட்ட பல்வேறு அறிஞர்களின் கருத்துகளை அழகாக தொகுத்து இந்த உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருந்தது அச்சுத் தொழிலே ஆகும். அச்சு இயந்திரங்களில் தொழில்நுட்பமும், அச்சக முதலாலாளிகளும் முன்னேறிய அளவிற்கு அதில் காலம் காலமாக பணிபுரியும் தொழிலாளர்கள் முன்னேறவில்லை. சிறிதும், பெரிதுமாக அச்சகங்கள் இருந்த போதும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவான ஊதியமே தரப்படுகிறது, புதிய இயந்திரங்கள் வரும் போது எந்த வித இழப்பீடும் தரமால் தொழிலாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்படுகிறார்கள், தொழிலாளர்களுக்கு சட்டப்படி உள்ள 8 மணி நேர வேலை, பி.எப்., இ.எஸ்.ஐ.,எதுவும் வழங்கப்படுவதில்லை.
Tuesday, 28 February 2012
சிறப்புடன் நடைபெற்ற மதுரை கருத்தரங்கம்
சென்ட்ரல் ஆர்கனிசேசன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU), அமைப்பு ,26 .02 .2012 ( ஞாயிறு ) அன்று . மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை மதுரை, மணியம்மை மழலையர் & தொடக்கப்பள்ளியில் , "உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையினைத் தடுக்கும் போக்கை முறியடிப்போம்" என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை சிறப்புடன் நடத்தியது , சி.ஓ.ஐ.டி.யு. யின் பொறுப்பாளர் தோழர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கம் சர்வதேச கீதத்தோடு துவங்கியது . உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி மாநில அமைப்பாளர் தோழர் வரதராஜ் , 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் தோழர் சுந்தர் , ஏ .ஐ.டி.யு.சி யை சேர்ந்த தோழர் கருப்பன் சித்தார்த்தன் , அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த தோழர் சம்பத் , மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பு செயலாளர் தோழர் பாலமுருகன் , பி.எஸ்.என்.எல்.இ.யு. தொழிற் சங்கத்தை சேர்ந்த தோழர் ஆனந்த் ஜெயகுமார் , அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த தோழர் பாரதி, மாற்றுக்கருத்து ஆசிரியரும், கேளாத செவிகள் கேட்கட்டும்- பகத்சிங் புத்தகத்தின் ஆசிரியருமான தோழர் த.சிவகுமார் , ஆகியோர் தொழிற் சங்கங்களின் இன்றைய நிலையினை விரிவாக எடுத்துரைத்தனர்.
Thursday, 23 February 2012
கருத்தரங்கம்
உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையினைத் தடுக்கும் போக்கை முறியடிப்போம்
தோற்றதில்லை தோற்றதில்லை தொழிற்சங்கம் தோற்றதில்லை. கேட்டதில்லை கேட்டதில்லை தோற்ற சரித்திரம் கேட்டதில்லை என்ற முழக்கம் எங்கும் ஒலித்த காலம் ஒன்று இருந்தது. தொழிலாளர் அலுவலகங்களில் தொழில் தாவாக்கள் அப்போதெல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. வேலை நிறுத்தங்கள், தர்ணாக்கள், உண்ணா விரதங்கள், பொதுக் கூட்டங்கள் என தொழிலாளர் பிரச்னைகளை மக்கள் முன் நிறுத்திய பல்வேறு நிகழ்வுகள் தொழிலாளர் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் அப்போது நிரம்பி வழிந்தன. ஒரு வகையான போர்க்குணமிக்க அரசியல் சூழல் அப்பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அப்படிப்பட்ட ஒரு சூழல் இல்லை. அதற்குக் காரணம் அப்போதிருந்த தொழிற்சாலைகள் எல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டதனாலில்லை. மாறாக ஒரு காலத்தில் விவசாயம் மட்டுமே ஓரே தொழிலாக நிலவிய நமது கிராமப்புறப் பகுதிகளில் தற்போது பல தொழிற்சாலைகள் புதிது புதிதாக முளைத்துள்ளன. இருந்தும் அப்படிப்பட்ட போர்க்குணமிக்க தொழிலாளி வர்க்க அரசியல் மட்டும் இல்லாமல் போய்விட்டது. முன்பிருந்ததைப் போல் தொழிற்சாலைகளுக்கு முன்பு பல்வேறு தொழிற்சங்கக் கொடிகள் பறக்கும் காட்சி அறவே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. சில காலங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளும் இதை அங்கீகரித்து எழுதின: தொழிற்சங்கங்களுக்கு தொழில் வளாகங்களிலிருந்து பிரியாவிடை கொடுக்கப்பட்டுவிட்டது என்று.
அதன் பின்னர் 2009 ம் ஆண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் குர்காவுன் நகரில் ஹோண்டா கார் உற்பத்தித் தொழிற்சாலையில் ஒரு மாபெரும் தொழிலாளி வர்க்க எழுச்சி தோன்றியது. ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடந்துவிட்டது போல் ஹரியானா மாநில அரசின் காவல்துறை எத்தனை அதிகபட்ச அடக்குமுறையை அதற்கு எதிராக ஏவிவிட முடியுமோ அத்தனை கடுமையான அடக்குமுறையை அதன்மீது ஏவிவிட்டது. அதன் பின் 2011 ம் ஆண்டு மாருதி உத்யோக் நிறுவனத்தில் ஒரு மாபெரும் கிளர்ச்சி தோன்றியது. மாருதி நிறுவனத்தின் கார்களிலேயே அதிகம் விரும்பி வாங்கப்படும் சுவிஃப்ட் ரகத்தைச் சேர்ந்த கார் தயாரிக்கும் மானேசர் கார் தொழிற்சாலையில் அந்தக் கிளர்ச்சி வெடித்துக் கிளம்பியது. காட்டுத்தனமான அடக்குமுறை அதன் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் சமீபத்தில் ஏனம் பகுதியில் ரெஜென்சி ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒரு பெரும் கிளர்ச்சி வெடித்துக் கிளம்பியது. போராடிய தொழிலாளிகளின் தலைவரான முரளி மோகன் காவல்துறையினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதையொட்டி எழுந்த கலவரத்தில் அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார்.
இவ்வாறு ஒரு காலகட்டத்தில் எங்கும் நிறைந்திருந்த தொழிலாளர் இயக்கமும் தொழிற்சங்கங்களும் அதன் பின்னர் இல்லாமல் போனது ஒரு தற்செயல் நிகழ்வா? அதன் பின்னர் தற்போது தொழிற்சங்க நடவடிக்கைகள் தலைதூக்கி வருவதும் தற்செயலாக நிகழும் ஒன்றா? அடிப்படையில் பின்னணியும் புறக் காரணிகளும் இன்றி எந்த வளர்ச்சிப் போக்குகளும் உருவாவதும் இல்லை; வளர்வதும் இல்லை. இந்த வளர்ச்சிப் போக்குகளுக்கும் புறக் காரணிகள் இருக்கவே செய்கின்றன. மூலதனம் நாடு விட்டு நாடு செல்வது ஒரு முதலாளித்துவ அமைப்பில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நிகழ்வே. ஆனால் அது உலக வர்த்தக அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் ஒரு முழு வீச்சுடன் நடைபெறும் ஒன்றாக 1995, 96 காலங்களில் வந்தது. அதையொட்டி உலக நாடுகள் அனைத்தும் உலகச் சந்தைக்காகப் பொருளுற்பத்தி செய்யும் போக்கு தோன்றியது. உலக நாடுகளுக்கிடையிலான பொருள் விற்பனைப் போட்டியில் அத்தனை தொழில் வளர்ச்சி இல்லாத நாடுகளின் பல பாரம்பர்ய உற்பத்திப் பொருட்களின் விலைகளில் பெரும் வீழ்ச்சிகள் ஏற்பட்டன. அதனால் தோன்றிய நெருக்கடியின் சுமை முழுவதையும் அந்தந்த நாடுகளின் முதலாளிகள் அந்நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தின் தலையில் ஏற்றி வைத்தன. இது காலங்காலமாக நடைபெற்று வரும் ஒன்றே. ஆனால் இப்போது அது நடைபெற்றதற்கும் இதற்கு முன்பு நடைபெற்றதற்கும் ஒரு மிகப்பெரும் வேறுபாடும் இருந்தது. முன்பெல்லாம் தொழில் நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர் தலைமீது முதலாளிகள் ஏற்றுவதும் அதனைத் தொழிற்சங்கங்கள் அம்பலப்படுத்துவதும் நிகழ்ந்தது. இப்போது முதலாளிகள் அவ்வாறு தொழிலாளர் மீது சுமைகளை ஏற்றுவது தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நடைபெற்றது. அவ்வாறு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவும் மறைமுகமாக நடைபெறவில்லை.
மாறாக உலகமயத்தின் அப்பாவிப் பலிகிடாய்களாக நமது முதலாளிகள் ஆகிவிட்டனர் என்ற கருத்தை முன்வைத்துத் தொழிற்சங்கங்கள் அதனை எவ்வித ஒளிவு மறைவுமின்றிச் செய்தன. அதன் விளைவாகத் தான் பஞ்சாலை போன்ற தொழில்களின் முதலாளிகள் நிரந்தரத் தொழிலாளரை ஒழித்தனர். சுமங்கலித் திட்டத்தை அறிமுகம் செய்தனர். தொழிலாளரின் ஓய்வுகாலப் பலன்களை விழுங்கி ஏப்பம் விட்டனர். அவ்வாறு இந்தியாவில் பாரம்பரியத் தொழில்களில் முதன்மையானதான பஞ்சாலைத் தொழிலில் ஏற்பட்ட போக்கு அனைத்து உற்பத்தித் தொழில்களிலும் பிரதிபலித்தது. அந்நிலையில் செயல்பாடிழந்தவையாகத் தொழிற்சங்கங்கள் ஆகிவிட்டன. வேறு நாடுகளில் எப்படியோ ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரையில் இந்த நெருக்கடியிலிருந்து மிக வேகமாக நமது முதலாளிகள் மீண்டு விட்டனர். பஞ்சாலைத் தொழிலில் நிலவிய கோட்டா முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அது பல புது வாய்ப்புகளை நமது பஞ்சாலை முதலாளிகளுக்கு ஏற்படுத்தித் தந்தது. மழைக்காலக் காளான்கள் போல் பஞ்சாலைகள் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிது புதிதாக முளைத்தன. அதைத் தொழிற்சங்கங்கள் கணக்கிற் கொள்ளவில்லை.
உலகமயத்தின் ஒரு விளைவாகத் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழில்களின் ஒரு முக்கியத் தளமாக நமது நாடு ஆகியது. மிகக் குறுகிய காலத்தில் பன்னாட்டு முதலாளிகளின் போட்டியாளர்களாக அத்துறை சார்ந்த நமது முதலாளிகள் வளர்ந்தனர். அவ்வாறு வளர்வதன் பின்னணியில் எத்தனை கொடும் சுரண்டல் இருந்திருக்க வேண்டும்? இருந்தாலும் அந்த ஆலைகளில் தொழிற்சங்கம் என்பது வரவும் இல்லை; தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் அத்தொழிலாளர்களுக்கு இல்லை. சேவைத் துறையில் இங்கு நுழைந்த வேற்றிட வேலைவாய்ப்பை ஒட்டி உற்பத்தித்துறைத் தொழில்களிலும் பன்னாட்டு மூலதனம் வரத்தொடங்கியது. அத்தொழில்களும் இங்கு தோன்றி வளரத் தொடங்கின. நமது நாட்டில் மிகக் குறைந்த கூலிக்கு தொழில் நுட்ப அறிவு பெற்ற தொழிலாளர் கிடைப்பதற்கிருந்த மிகப்பெரும் வாய்ப்பு அதற்குக் காரணமாக இருந்தது. அதனால் கார் தொழிற்சாலைகள் மிக அதிக எண்ணிக்கையில் இங்கு வரத் தொடங்கின. தகவல் தொழில்நுட்பத் தொழில்களில் வேறு நாடுகளிலும் நமது நாட்டிலும் பணிபுரியும் தொழில்நுட்ப அறிவு பெற்ற தொழிலாளர்களின் வாங்கும் சக்தியில் ஏற்பட்ட உயர்வினை அடிப்படையாகக் கொண்டு கார், கட்டுமானம் மற்றும் நுகர்பொருள் தொழில்களில் வளர்ச்சி ஏற்பட்டது. அவை சார்ந்த தொழில்கள் பல உருவாயின.
ஆனால் முதலாளிகளுக்காக நீலிக்கண்ணீர் வடித்த தொழிற்சங்கங்களின் போக்கில் மட்டும் மாற்றம் இல்லை. அவை தொழிற்சங்கங்கள் அமைப்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இதை மையமாக வைத்துத் தான் தொழிற்சாலைகளின் வரைபடத்திலிருந்து தொழில் உற்பத்தியின் முக்கியக் காரணியான தொழிலாளரின் உரிமைகளுக்குப் போராடும் அமைப்பு துடைத்தெறியப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் தொழிலாளரிடையே போராடும் சூழ்நிலையை உருவாக்கும் சமூகத்தின் அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டை அவ்வாறு துடைத்தெறிய முடியாது. அது எப்படியாவது வெளிப்பட்டே தீரும். அதனால் தான் எத்தனை அடக்குமுறைகள் அதன் மீது திணிக்கப்பட்டாலும் குர்காவுனிலும் ஏனாமிலும் அது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ளது.
இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் ஜனநாயகம் பல உரிமைகளை அனைத்து மக்களுக்கும் வழங்குவதாக கூறப்பட்டாலும் இந்த அமைப்பில் தனக்கென சொத்தேதும் இல்லாத உழைக்கும் வர்க்கத்திற்கு இருக்கக்கூடிய ஒரே ஜனநாயக உரிமை சங்கம் சேர்த்துப் போராடும் உரிமை மட்டுமே. அதனை நாசூக்கான பல பெயர்களில் தடுக்கும் போக்கே தற்போது தலைவிரித்தாடுகிறது. நமது நாட்டை வல்லரசு ஆக்குவது, அன்னிய முதலீடு வருவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்குவது, தொழில் அமைதிக்கு வழிவகுப்பது என்ற பெயர்களில் அரசு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைத் தடுக்க முயல்கிறது. அதற்காகத் தொழிற்சங்கச் சட்டங்களில் வேலைப் பாதுக்காப்பினை இல்லாமல் செய்யும் பல ரத்துக்களைச் சேர்த்து வருகிறது. 7 பேர் இருந்தால் கூட சங்கம் அமைக்க முடியும் என்றிருந்த தொழிற்சங்கச் சட்டத்தினை மாற்றி குறைந்தபட்சம் 100 பேர் அதற்கு வேண்டும் என்று சட்டத்தைத் திருத்தியுள்ளது. வேலை நீக்கத்தை எளிதாக்கும் வகையில் தொழில் தகராறு சட்டத்திலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதனை இன்னும் பல வகைகளில் கொண்டுவர உத்தேசித்தும் உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டு வரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை அப்பட்டமாகவே தடை செய்யப்பட்டுள்ளது.
ஒருபுறம் அரசு தொழிற்சங்கம் அமைப்பதைத் தடுக்க இவ்வாறு வரிந்து கட்டிச் செயல்படும் வேளையில் தனது பங்கிற்குத் தொழிற்சங்கங்கள் என்று செயல்படும் நமது நாட்டின் அமைப்புகள் அதற்கு எந்த எதிர்ப்பும் தராமல் தொழிற்சங்கம் அமைக்கும் போக்கினை உள்ளிருந்தே முடமாக்கும் வேலையைச் செய்கின்றன. தற்போது அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள உற்பத்தித்துறையை மேம்படுத்தும் திட்டப்படி அக்கொள்கை அடிப்படையில் உருவாக்கப்படும் தொழில்களில் வேலைசெய்யும் தொழிலாளருக்கு எந்தவகை வேலைப் பாதுக்காப்பும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் அவர்களை வேலையைவிட்டுத் தூக்கிவிட முடியும். அதற்கு ஒரு சிறு இழப்பீட்டினை மட்டும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று கூறப்படுகிறது.
வேலைப் பாதுகாப்பு மட்டுமின்றி தொழிற்சங்கம் இல்லாததால் தொழிலாளரின் கூட்டு பேர உரிமையும் பாதிப்புக்கு ஆளாகி சம்பள உயர்வு போன்றவை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ள நிலை உருவாகியுள்ளது. தற்போது ஏனம் ரெஜென்சி தொழிற்சாலையில் தோன்றிய பிரச்னையும் இன்று அனைத்துத் தொழில்களிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் பிரச்னைகளும் ஒப்பந்தத் தொழிலாளராக பலரை நியமித்து ஆலையின் நிரந்தரத் தொழிலை நடத்துவதால் ஏற்பட்டவையே. 800க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளரின் கூலி உயர்வுப் பிரச்னையே இத்தகைய கொடும் அடக்குமுறைக்கும் அதை ஒட்டிய வன்முறைக்கும் காரணமாகும். இத்தொழிலில் மட்டுமின்றி தற்போது புதிதாக தோன்றி வளர்ந்துவரும் பொறியியல் சார்ந்த தொழில்கள் அனைத்திலும் இவ்வாறு ஒப்பந்தத் தொழிலாளராக மிக அதிகத் தொழிலாளரை வைத்து நிரந்தரத் தொழில்களைச் செய்வதும் அதன்மூலம் உழைப்பாளரைச் சுரண்டிக் கொள்ளை லாபம் ஈட்டுவதும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
நாம் முன்னர் பார்த்தது போல் எப்படித் தடுத்தாலும் சமூகத்தில் உள்ள வர்க்க முரண்பாடு வெடித்துக் கிளம்பத்தானே செய்யும். அவ்வாறிருக்கையில் அதற்காக பிரத்தியேகமாகத் தொழிற்சங்கம் அமைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி இங்கு எழலாம். தொழிற்சங்க உணர்வு தொழிலாளரிடம் இயற்கையாகவே வருவது. ஆனால் அதனை அரசியல் ரீதியாக வழிகாட்டவல்ல அரசியல் உணர்வு ஒரு சரியான பாட்டாளி வர்க்க அரசியல் கட்சியினால் தொழிற்சங்க இயக்கத்திற்குள் வெளியிலிருந்து கொண்டுசெல்லப் படுவது. அப்படிப்பட்ட சரியான அடிப்படை அரசியல் வழியினைக் கொண்ட பாட்டாளி வர்க்க அரசியல் கட்சியின் வழிகாட்டுதல் இல்லாததால்தான் பல தொழிற்சங்கங்களின் இந்திய முதலாளிகள் குறித்த பார்வையில் ஏற்பட்டுள்ள கோளாறும், அதன் விளைவாகத் தற்போது நிலவும் அவலநிலையும் தோன்றியுள்ளது. அதாவது செயல்பட்டுக் கொண்டிருந்த பல தொழிற்சங்கங்கள் பெயர்ப்பலகைத் தொழிற்சங்கங்களாக மாறியுள்ளன. தொழிற்சாலைகள் பல பெருகியும் அத்தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளரிடம் தொழிற்சங்க உணர்வு ஹோண்டா, மாருதி, ரெஜென்சி ஆகிய நிறுவனங்களில் தோன்றியது போல் தோன்றவில்லை. தொழிற்சங்கம் கொண்டுவருவதற்கான போக்கு நிரம்பித் ததும்பியும் அது தொடர்ச்சியாகச் செழுமைப்படுத்தப் படாமல் தேங்கிவிடுகிறது.
இந்த அவலநிலையைப் போக்கி தொழிலாளர் இயக்கத்தை அதன் வர்க்க விடுதலை என்ற திசை வழியை நோக்கி வழிநடத்துவது இன்றைய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலையாய கடமையாகும். முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச சமூக மாற்றம் என்ற சரியான அடிப்படை அரசியல் வழியின் வழிகாட்டுதலில் செயல்படும் ஒரு சரியான அமைப்புதான் அக்கடமையினைச் செவ்வனே ஆற்ற முடியும். அத்தகைய அமைப்பான சென்ட்ரல் ஆர்கனிசேன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (சி.ஓ.ஐ.டி.யு.) அந்த வரலாற்றுப் பணியினைச் சிரமேற்கொண்டு செய்யும் முனைப்புடன் உள்ளது. உணர்வுமிக்க உழைக்கும் வர்க்க அமைப்புகளை ஏற்படுத்தும்அதன் முயற்சிகளுக்கு முழு ஆதரவினை நல்கி தொழிலாளி வர்க்க இயக்கத்தைச் சரியான பாதையில் கொண்டு செல்லத் துணை நிற்குமாறும், அதற்குத் தங்களாலான உதவி புரியுமாறும் கரத்தாலும் கருத்தாலும் பாடுபடும் தொழிலாளரை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
நாள் : 26 .02 .2012 ( ஞாயிறு ). மாலை 6 மணி முதல் 9 மணி வரை ,
இடம்: மதுரை, மணியம்மை மழலையர் & தொடக்கப்பள்ளி ,
( வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோவில் எதிரில் )
சிறப்புரை :தோழர்.அ.ஆனந்தன், தென் இந்தியப் பொது செயலாளர், சி.டபிள்யு.பி.
சென்ட்ரல் ஆர்கனிசேன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU), தமிழ்நாடு.
தொடர்பு முகவரி : அழகு முருகன் காம்ப்ளக்ஸ் , ஆதவன் டுயூசன் செண்டர் மாடியில் , நத்தம் மெயின் ரோடு , நாராயணபுரம் , மதுரை - 14 .
தொடர்பிற்கு :கு. கதிரேசன் ( பொறுப்பாளர் சி.ஓ.ஐ.டி.யு.): 9843464246
Subscribe to:
Comments (Atom)









